வாங்குன கடன கட்ட எஸ்பிஐ வங்கியிடமே மீண்டும் கடன் கேட்டுள்ளார் மோடியின் நண்பர் யோகாகுரு பாபாராம் தேவ். அவர் ருச்சி சோயா நிறுவனத்தை 4,350 கோடி ரூபாய் கொடுத்து வாங்க இருப்பதாக உறுதிபடுத்தப்பட்ட செய்திகள் வருகின்றன.
ஆனால் பதஞ்சலி ஆயுர்வேநிறுவனத்தால் 600 கோடி ரூபாய்க்கு மேல் திரட்ட முடியாத நிலையில் தற்போது எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க், ஜே அண்ட் கே பேங்க் என பலரிடமும் வட்டிக்குக் கடன் கேட்டிருக்கிறது அந்நிறுவனம். ருச்சி சோயா என்கிற நிறுவனத்துக்கு கடுமையான கடன் நெருக்கடி இருந்து வருகிறது. ருச்சி சோயா நிறுவனம், எஸ்பிஐ வங்கிக்கு 1,800 கோடி ரூபாய் கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். இதேபோல் சென்ட்ரல் பேங்க்-க்கு 816 கோடி, பஞ்சாப் நேஷனல் பேங்க்-க்கு 750 கோடி ரூபாய் என பல இந்திய அரசு வங்கிகளுக்கு மொத்தம் 9,300 கோடி ரூபாயைத் திருப்பித் தர வேண்டும். ஆனால் ருச்சி சோயா நிறுவனத்தால் திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் திவாலாகி உள்ளது. அதைத்தொடர்ந்து தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம், ருச்சி சோயா நிறுவன கடன் தொடர்பாக புகார் செய்யப்பட்டது. இதையடுத்து, ருச்சி சோயா நிறுவனத்தை வாங்க அதானியும், பதஞ்சலி நிறுவனமும் முன் வந்தார்கள். இதையடுத்து தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் அதிக தொகைக்கு ருச்சி சோயாவை வாங்குபவர் கொடுக்கும் பணத்தை, ருச்சி சோயா நிறுவனத்துக்கு கடன் கொடுத்த வங்கிகள் பிரித்து எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டது. ஏலத்தில் அதானி சுமார் 6,000 கோடி ரூபாய் வரை கொடுத்து ருச்சி சோயாவை வாங்க முன் வந்தார். ஆனால் திடீரென ஏலத்தில் இருந்து விலகிக் கொள்வதாக அதானி தெரிவித்தார். இதையடுத்து 4,350 கோடி ரூபாய்க்கு பதஞ்சலி அந்த நிறுவனத்தை வாங்க முன்வந்தது. இந்த 4350 கோடி ரூபாயில் 115 கோடி ரூபாய் ருச்சி சோயா நிறுவனத்தின் பங்குகளை வாங்க பயன்படுத்த உள்ளனர். மேலும் ருச்சி சோயா நிறுவனத்தை மேம்படுத்த, தொழில் செய்யத் தேவையான முதலீடுகளாக 1,700 கோடி ரூபாய் முதலீடு செய்கிறார்கள். பாக்கி 2,435 கோடி ரூபாய் தான் ருச்சி சோயா வாங்கி இருக்கும் கடனைத் திருப்பிச் செலுத்த பயன்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் 9,300 கோடி ரூபாய் கடன் கொடுத்த வங்கிகளுக்கு வெறும் 2,435 கோடி ரூபாய் மட்டுமே கிடைக்கும். இப்போது அந்த 2,435 கோடி ரூபாய் கடனைக் திருப்பி வசூலிக்க, பதஞ்சலிக்கு 3,700 கோடி ரூபாயை கடனாகக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன இந்த வங்கிகள் . இதனால் எஸ்பிஐ கிட்ட வாங்குன கடன திருப்பி அடைக்க, எஸ்பிஐ கிட்டயே திரும்ப கடன் வாங்குறார் மோடி நண்பர் ராம் தேவ் என்று பொருளாதார நிபுணர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.